4. கருத்தனே எனது கருத்தினுக் கிசைந்த
கணவனே கணவனே என்கோ
ஒருத்தனே எல்லாம் உடையநா யகனே
ஒருதனிப் பெரியனே என்கோ
திருத்தனே எனது செல்வமே எல்லாம்
செயவல்ல சித்தனே என்கோ
நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ
நிறைஅருட் சோதிநின் றனையே.
5. தாயனே எனது தாதையே ஒருமைத்
தலைவனே தலைவனே என்கோ
பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த
பெருந்தகைப் பெரும்பதி என்கோ
சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ
சித்தெலாம் வல்லசித் தென்கோ
தூயனே எனது நேயனே என்கோ
சோதியுட் சோதிநின் றனையே.
6. அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும்
ஆனந்தத் தனிமலர் என்கோ
கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ
கடையனேன் உடையநெஞ் சகமாம்
இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி
இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ
துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ
சோதியுட் சோதிநின் றனையே.
7. தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த
சர்க்கரை அமுதமே என்கோ
மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த
முகநகைக் கணவனே என்கோ
போகமுள் விரும்பும் போதிலே வலிந்து
புணர்ந்தஓர் பூவையே என்கோ
ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த
அம்பலத் தாடிநின் றனையே.
8. தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
தனில்உறும் அனுபவம் என்கோ
ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
ஓங்கிய ஒருமையே என்கோ
சித்துவந் தாடுஞ் சித்தனே என்கோ
திருச்சிற்றம் பலத்தவ நினையே.